பேரறிஞர் அண்ணா சிலை புதுக்கோட்டை கீழராஜ வீதியில் நிறுவப்பட காரணம் என்ன?

 @அண்டனூர் சுரா

அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தியடிகள் இரு தலைவர்களுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் அதிகமான சிலை ஒருவருக்கு  நிறுவப்பட்டுள்ளது என்றால் அது பேரறிஞர் அண்ணாவிற்குத்தான். அண்ணா சிலை அண்ணல் அம்பேத்கர் சிலை அளவிற்குப் பரபரப்பும் பதட்டமும் கொண்டதல்ல.  ஒன்று குனிந்த தலை நிமிராமல் கையில் ஒரு புத்தகம் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பார். இல்லையேல் ஏதேனும் ஒரு சதுக்கத்தில் அல்லது ஒரு வட்டமான போக்குவரத்து வழிச் சாலையின் மையத்தில்  ஏதேனும் ஒரு திசையை விரல்நீட்டியவராய் நின்றுகொண்டிருப்பார். அண்ணா சிலை என்பது இந்த இரண்டில் ஒன்றாகவே இருக்கும்.


புதுக்கோட்டையின் முதல் சிலை
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் தொடங்கி கீழ ராஜ வீதி வரை  அடுத்தடுத்து நிறைய சிலைகள் உள்ளன. புதுக்கோட்டையில் நிறுவப்பட்டுள்ள முதல் சிலை மன்னர் மார்த்தாண்ட பைரவர் தொண்டைமானுக்கு நிறுவப்பட்ட சிலையாகும். இச்சிலை நீதிமன்ற வளாகத்தின் முகப்பில் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை குறித்து வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம். இதே நீதிமன்ற வளாகத்திற்குள் மேலும் இரண்டு தலைவர்களின் சிலைகள் உள்ளன. ஒன்று தீரர் சத்தியமூர்த்தி சிலை. இச்சிலை குறித்து முந்தைய பதிவில் எழுதியுள்ளேன். நீதிமன்ற சுவருக்கும் வெளியே அண்ணல் அம்பேத்கர் சிலை இருக்கிறது. புதுக்கோட்டை சிலைகளில் பெரும் பரபரப்பைத் தன்னகத்தே கொண்டுள்ள சிலை இது. 

பழைய பேருந்து நிலையத்தின் மையத்தில் எம்.ஜி. ஆர் சிலை உள்ளது. இந்த வெங்கலச் சிலை சமீபத்தில் நிறுவப்பட்டதாகும். புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, ஆலங்குடி செல்லும் பேருந்துகள் இந்த சிலையைச் சுற்றிதான் சென்றாக வேண்டும்.

பெரியார் சிலை

எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து  கீழ ராஜவீதிக்கு செல்லும் வழியில் மார்த்தாண்டபுரம் முதல் சந்து பிரியுமிடத்தில் மிக உயரமான பீடத்தின்மேல் பெரியார் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அவ்வளவு எளிதில் யார் கண்ணுக்கும் புலப்படாத இச்சிலை இரவோடு இரவாக நிறுவப்பட்டதாகும். இதைக்கடந்து உள்ளே சென்றால் காந்தி பூங்காவில் இரண்டு சிலைகள் உள்ளன. ஒன்று காந்தியடிகள் சிலை. மற்றொரு சிலை புதுக்கோட்டை மண்ணின் மைந்தரும் மேனாள் நகர்மன்ற தலைவர் தர்மராஜ் பிள்ளையின் சிலை.

அண்ணா சிலை

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தை கீழ ராஜவீதியுடன் இணைப்பது மார்த்தாண்டபுரம் வீதி. இந்த இந்த இரண்டு வீதிகளும் சந்திக்குமிடம் நாற்சந்தியாக உள்ளது. அந்த இடத்தில்தான் அண்ணாவின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.  இச்சிலைக்கும் பின்புறம் அதாவது மார்த்தாண்டபுரம் சாலை சமீப காலமாக அண்ணா சாலை என்று அழைக்கப்படுகிறது. அதற்கான பெயர்ப்பலகையும் அங்கே நிறுத்தப்பட்டுள்ளது.  இந்தச் சிலைக்கும் பின்புறம் மன்னராட்சி காலத்திய எழுப்பிய விக்டோரியா வாயில் இருந்தது. தற்போது அது இடிக்கப்பட்டுவிட்டது.



அண்ணா சிலை பெரும்பாலும் திராவிட அரசியல் பிரமுகர்களின் வழிபாட்டு அடையாளமாக இருந்துவருகிறது.  அரசியல் கடந்து அண்ணாவைப் பார்க்கிறவர்கள் பேரறிஞராக பார்க்கிறார்கள்.

அண்ணா சிலை பரபரப்பு

சமீபத்தில் அந்தச் சிலை பெரும் பரபரப்புக்கு உள்ளானது. அண்ணா சிலையைச் சுற்றி அமைத்துள்ள இரும்பு கூண்டிற்கும் மேலேறி ஒருவர் கால்மேல் கால் கிடத்திக்கொண்டு தூங்கிய காட்சி தொலைக்காட்சிகளில் பரபரப்பு செய்தியாக ஒளிபரப்பானது. இதன்பிறகே இச்சிலையை நான்  நெருங்கி கவனித்தேன். அண்ணா அவரே  மேடையில் ஏறிநின்று  விரல் நீட்டியவராய் நின்றுகொண்டிருப்பதைப் போல தத்ரூபமாகத் தெரிந்தார். தமிழக சிலைகளில் அண்ணா சிலை அளவிற்கு வேறு யாருடைய சிலையும் இவ்வளவு தத்ரூபமாக இருப்பதில்லை. ஜெயலலிதா சிலையும் சரி சமீபகாலமாக அதிகம் நிறுவப்பட்டுவரும் கலைஞர் மு. கருணாநிதி சிலையும் சரி இரு சிலைகளும் அவரை நினைவூட்டும் சிலையாக இருக்குமே தவிர அவர்களைப் போல அச்சு அசலாக இருப்பதில்லை.




புதுக்கோட்டை அண்ணா சிலையின் சிறப்பு

புதுக்கோட்டை அண்ணா சிலையை சமீபத்தில் கூர்ந்து கவனிக்கும் யாருக்கும் சென்னையில் முதன்முதலாக நிறுவப்பட்ட 
 அண்ணா சிலையை நகலெடுத்து நிறுவப்பட்டதாக தெரியும்.

இச்சிலை 22.03.1970 அன்று அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர்  ஒய்.எஸ். சவான் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார். முன்னிலை - தமிழ்நாடு அறநிலைய அமைச்சர் கே.வி. சுப்பையா அவர்கள்.

இச்சிலையின் பீடத்தைச் சுற்றிலும் நான்கு கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஒன்றில் திறப்பு விழா குறிப்பும் மற்றொன்றில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு; அண்ணாவின் பிறப்பு நாள், பிரிவு நாட்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் 'பொதுமக்களின் அன்பளிப்பால் நகராட்சியினரால் நிறுவப்பட்டது' என்கிற குறிப்பும் அதன் கீழ் சிற்பி எஸ்.பி. பிள்ளை என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய இந்நிலையிலான  இச்சிலையும் அழகும்  கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்டதாகும்.

யார் இந்த எஸ்.பி. பிள்ளை

சென்னை அண்ணா சாலையில் 01.01.1968 அன்று அண்ணா உயிருடன் இருந்த காலத்தில் அவருக்காக ஒரு சிலை நிறுவப்பட்டது. அப்பொழுது இச்சாலை மவுண்ட் ரோடு என்று அழைக்கப்பட்டது.  அண்ணாவுக்கு நிறுவப்பட்ட முதல் சிலை இதுதான். அந்த சிலையின் அச்சு நகல்தான் புதுக்கோட்டை அண்ணா சிலை.

சென்னை அண்ணா சிலை

சென்னையில் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில்  உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து அண்ணாவுக்கு சிலை வைக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினார்கள்.  குறிப்பாக  எம்.ஜி.ஆர் அவர்கள் அதிக விருப்பம் காட்டினார். இந்தச் சிலையை நிறுவ அண்ணா அவர்கள் விரும்பவில்லை. ஆயினும் எம்.ஜி.ஆர் அவர்கள் விடாப்பிடியாக சிலை நிறுவும் முயற்சியில் இறங்கினார். இந்தச் சிலைக்கு மாதிரியாக சிற்பியிடம் அண்ணாவின் புகைப்படத்தைக் கொடுத்து சிலை வடிக்கச் சொன்னார். அந்தப் படத்தை மாதிரியாகக் கொண்டு சிற்பியும் சிலை வடித்தார். அந்தச் சிலை எதிர்பார்த்தபடி இல்லை.

அண்ணா வரவழைக்கப்படல்

அண்ணா  இங்கே நேரில்வந்து மாதிரியாக காட்சிக்கொடுத்தால்தான்  அவரைப் போலவே சிலை வடிக்கமுடியும் என்று சொல்லிவிட்டார் சிற்பி. அண்ணாவைக் கட்டாயப்படுத்தி  சிற்பியின் பட்டறைக்கு அழைத்துவந்து சிற்பியின் முன்பு அமரவைத்தார் எம்.ஜி.ஆர்.  அவரை அப்படியே பிர
தி எடுத்த சிற்பி சிலையை அவரைப்போலவே வடித்துக் கொடுத்தார். அந்த சிலை மவுண்ட் ரோட்டில் நிறுவப்பட்டது. அந்தச் சிலை பீடத்தில் சிற்பியின் பெயர் பொறிக்கப்படவில்லை.  அந்த சிலையை வடித்த பெருமைக்குரியவர் எஸ். பி. பிள்ளை எனும் எஸ். பக்கிரிசாமி பிள்ளை அவர்கள்.


கீழராஜ வீதியில் ஏன் அண்ணா சிலை

திராவிட கட்சிஆட்சியில் புதுக்கோட்டை ஆட்சிப் பகுதியிலிருந்து பதவியேற்ற முதலாவது அமைச்சர்  கே.வி.சுப்பையா அவர்கள். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்கையில் பேரறிஞர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில் அறநிலையத் துறை அமைச்சராக பதவியேற்றார்.  இவர் ஆலங்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

அண்ணா இவர்கள் 3.02.1969 அன்று இறந்துவிட அவருக்குப் பிறகு அமைக்கப்பட்ட கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் அதே அமைச்சராக நீடித்தார். இவர் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் ஆலங்குடி சாலை புதுக்கோட்டை நகருக்குள் நுழையும் முக்கிய இடமான கீழராஜ வீதி திருப்பத்தில்  விக்டோரியா நுழைவு வாயிலையொட்டி இச்சிலையை நிறுவினார். இச்சிலை அண்ணாவின் சிலையை அச்சு அசலாக தத்ரூபமாக வடித்த  எஸ்.பி. பிள்ளையைக் கொண்டு இச்சிலையை வடித்து இங்கே நிறுவப்பட்டது. இச்சிலையை வடித்த சிற்பியைக் கவுரவிக்கும் பொருட்டு கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது. வேறெந்த சிலையிலும் இவரது பெயர் வடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பெரியாரால் கவரப்பட்ட எஸ்.பி. பிள்ளை

சென்னை மவுன்ட் ரோட்டில் அண்ணா அவர்களுக்கு சிலை நிறுவியதைத் தொடர்ந்து கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கும் சிலை நிறுவப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார். ஒரு மேடையில் இதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். 

எனக்கு சிலை வேண்டியதில்லை, பெரியார் அவர்களுக்கு சிலை வைப்பதே என் முதலாயப் பணி என்றார் கலைஞர். அவர் சொன்னபடியே பெரியார் அவர்களுக்கு மவுண்ட் ரோடு சிம்சனில்  சிலை திறந்தார்.

கலைஞர் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்  கலைஞர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்தது. இதற்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில்  கலைஞர் அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பில் சிலை அமைக்கப்படும் என்று பெரியார் அறிவித்தார்.  அதை மு. கருணாநிதி அவர்கள்  விரும்பவில்லை என்றாலும் கலைஞர் அவர்களிடம் எடுத்துச்சொல்லி பெரியாரின் எண்ணம் ஈடேற ஒத்துழைக்கும்படியாக திராவிடக் கழகத்தினர் கேட்டுக்கொண்டார்கள். 



கலைஞர் அவர்களைத்  தத்ரூபமாக சிலை வடிக்கும் பொறுப்பை பெரியார் அவர்கள்  சிற்பி எஸ். பி. பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்தார்.  இச்சிலை குறிப்பிட்ட காலத்தில் வடிக்கப்பட்டாலும் சிலை நிறுவ காலத்தாமதமானது. இதற்கிடையில் பெரியார் அவர்கள் மறைந்துவிடுகிறார். அதன் பிறகு 21.9.1975 அன்று மணியம்மையாரின் தலைமையில் குன்றக்குடி அடிகளார், சென்னை அண்ணாசாலை புகாரி ஒட்டல் அருகில் கலைஞரின் திருவுருவச் சிலை வெங்கலச் சிலையாகத் திறக்கப்பட்டது.

இந்தச் சிலை நீண்ட காலம் இருந்தது. எம்.ஜி.ஆர் மறைந்த நாளன்று அந்த சிலை இடித்து தள்ளப்பட்டது. ஒரு சிறுவன் ஒரு பாறையால் சிலையின் மார்பில் குத்தி சாய்க்கப்பட்ட சம்பவத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்துடன்கூடிய செய்தியாக வெளியிட்டது. இந்தச் செய்தியையடுத்து கலைஞர் உடன்பிறப்புகளுக்கு இவ்வாறு ஒரு மடல் எழுதினார்.


உடன்பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்தச் சின்னத் தம்பி
என் முதுகினில் குத்தவில்லை -
நெஞ்சிலேதான் குத்துகிறான்.
அதனால் நிம்மதி எனக்கு
வாழ்க! வாழ்க!!



ஒய். எஸ். சவான்

திரும்பவும் புதுக்கோட்டை அண்ணா சிலைக்கு வருவோம். இச்சிலையை கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் திறந்து வைத்தவர் அன்றைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ஒய். எஸ். சவான் அவர்கள். இவர் இந்திரா காந்தி  தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பதவி வகித்தவர். மேலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிப்ரவரி 3, 1969 அன்று இறந்து போகையில் பிரதம மந்திரியின் சார்பில் மரியாதை செலுத்தியவர் இவரே. இவரைக்கொண்டு இச்சிலை திறப்பதற்கு மேலும் ஒரு காரணமிருந்தது. இவர் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். மேலும் இவர் அண்ணாவின் நெருங்கிய நண்பராவார். 



 


புதுக்கோட்டையில் நிறுவப்பட்ட சிலைகளில் மூன்றாவது சிலை அண்ணா சிலையாகும். அப்படியென்றால் இரண்டாவது சிலை எது? யோசித்து வையுங்கள்,,,



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

டி.இ.எல்.சி (TELC)