புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா
தமிழ்நாட்டிலுள்ள பேருந்து நிலையங்களில் நன்கு திட்டமிடப்பட்ட பேருந்து நிலையமாக புதுக்கோட்டை பேருந்து நிலையம் திகழ்கிறது. காரணம் இந்த நிலையம் 'ப' வடிவிலும் பேருந்துகள் நெரிசலில்லாமல் எளிதாக உள்ளே நுழைந்து வெளியேறும்படியாகவும் உள்ளது.
புதுக்கோட்டை நகராட்சிக்கென்று ஒரு பரந்த பேருந்து நிலையம் இல்லாத நிலை இருந்தது. பழைய பஸ் ஸ்டாண்ட் என்று சொல்லப்படுகின்ற பழைய பேருந்து நிலையம் பேருந்து நிறுத்தம் (bus stop) என்கிற அளவிலேயே இருந்தது. மதுரை, சிவகங்கை, அறந்தாங்கி பேருந்துகள் வந்து திரும்ப அந்த நிறுத்தம் உகந்த இடமாகவும் திருச்சி, தஞ்சாவூர், மணப்பாறை பேருந்துகள் நகர வீதிகள் வழியே நுழைந்து அந்த இடத்திற்கு வந்தாக வேண்டிய நிலையும் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆகவே வேறொரு இடத்தில் விசாலமான பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான இடம் தேடுகையில் நகரத்திற்கு தென்மேற்கில் பரந்த நீர்நிலையைக் கொண்ட காட்டுப்புதுக்குளம் உகந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது.
மழைக்காலத்தில் பெரும் தெப்பமாகவும் கோடை காலத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் காடாகவும் இந்த இடம் இருந்தது. இந்த இடம் பேருந்து நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்டு 24. 04.1966 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டியவர் அன்றைய மெட்ராஸ் மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சராக இருந்த திரு. வெ. இராமையா அவர்கள்.
அப்பொழுது புதுக்கோட்டை நகராட்சியின் ஆணையராக இருந்தவர் கி. கண்ணையா, நகராட்சி தலைவராக இருந்தவர் க. தர்மராஜ பிள்ளை.
இந்தக் கல்வெட்டில் மூன்று பிழைகள் உள்ளன. ஒன்று 1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை மாநிலம் என்றே பெயர் விளங்கியது. ஆனால் கல்வெட்டில் தமிழ்நாடு என்று இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து இக்கல்வெட்டு பிற்காலத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
அடுத்து கண்ணையா என்கிற பெயர் கன்னைய என்றும் தர்மராஜ் பிள்ளை என்பது தர்மராஜ பிள்ளை என்றும் தவறுதலாக பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டில் வியக்கத்தக்க செய்தி ஒன்றுண்டு. இந்தக் கல்வெட்டை அன்றைய காலத்தோடு பொறுத்திப் பார்க்க வேண்டும். கல்வெட்டில் அமைச்சரின் பெயர் சாதி அடையாளமற்று இருப்பதை பார்க்கலாம். அன்று அரசியல் தலைவர்கள் தன் பெயருக்கும் பின்னே சாதியையும் சாதியின் பட்டத்தையும் இடம் பெற செய்வதைப் பெருமையாக கருதிய காலம் அது. உதாரணமாக, தஞ்சாவூர் சரபோஜி கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய அன்றைய முதலமைச்சரின் பெயர் சாதி அடையாளத்துடனே பொறிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய அந்தக் காலக்கட்டத்தையொட்டியே புதுக்கோட்டை பேருந்து பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதில் அமைச்சரின் பெயர் சாதிப்பட்டம் இல்லாமலும் அவர் படித்த பட்டத்துடனும் இடம் பெற்றிருப்பது முன்மாதிரியாக திகழ்கிறது.
திரு. வெ. இராமையா பி.ஏ
வெ. இராமையா அவர்கள் விடுதலை போராட்ட வீரர். மக்களால் தியாகி இராமையா என்று அழைக்கப்பட்டவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சிறிது காலம் இருந்தவர். இவர் திருமயம் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 - 1967 பத்து ஆண்டுகளில் மின்சாரம், மதுவிலக்கு , உணவு துறை என்று பல துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை நிலப்பகுதிக்குட்பட்ட தொகுதியிலிருந்து நியமிக்கப்பட்ட முதல் அமைச்சராவார்.
பேருந்து நிலையம்
இன்று காட்டுப்புதுக்குளத்தின் கீழ்பகுதியில் பேருந்து நிலையமும் மேல்பகுதியில் ராணியார் பள்ளியும் மகளிர் கல்லூரியின் மைதானமும் மாவட்ட விளையாட்டு திடலும் அமையப்பெற்றுள்ளது. பேருந்து நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு பகுதியை டெப்போவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் குறித்து புதுக்கோட்டை வாழ் மூத்தோர்களிடம் விசாரிக்கையில், "புதுக்கோட்டை நகரம் என்பது பெரும்பகுதி குளங்களைக் கொண்டது. குளங்கள் அடுத்தடுத்து பெருகி காட்டுப்புதுக்குளம் நிரம்பி தென் திசை நோக்கி ஓடி குண்டாறு ஆற்றில் போய் விழும். கோடை காலத்தில் குளம் வறண்டு போய்விடும். இந்தக் குளத்தின் குறுக்கே வடமேற்கு திசையிலிருந்து தென்கிழக்கு திசையை நோக்கி ஒற்றையடி பாதை செல்லும்" என்று நினைவு கூர்ந்தார்கள்.
இது குளம்தானா, குளம் என்றால் கரை இருக்க வேண்டுமல்லவா, இதை உறுதிசெய்ய கரையைத் தேடினேன். புதுக்கோட்டை டெப்போவிற்கும் தென்புறம் உயரமான கரை இருப்பதைப் பார்க்க முடிந்தது. இக்கரை இன்று குடியிருப்புகளாகவும் இக்குடியிருப்பின் வீதி நேராக இல்லாமல் பாம்பு போல வளைந்தும் சமதளமற்றும் இருக்கிறது. கரைக்கு தென்புறம் தாழ்ந்த பகுதி வயலாக இருந்து இன்று குடியிருப்பாக இருக்கிறது. இந்தத் தெரு , வீதி குறித்து வேறொரு பதிவில் எழுதுகிறேன்.
சரி, பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியது சரி, யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்தப் பேருந்து நிலையம் கட்டினார்கள். யோசித்து வையுங்கள், அடுத்து எழுதுகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக