டி.இ.எல்.சி (TELC)
புதுக்கோட்டை நகரவாசிகள் மட்டுமல்ல, நகரத்தைச் சுற்றியுள்ள பலரும் எதோ ஒருவகையில் டிஇஎல்சி உடன் நெருக்கம் கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டை, கரம்பக்குடி, இலுப்பூர், கீரனூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் புதுக்கோட்டை பள்ளியில் படிக்க விரும்பினால் அவர்களது முதல் தேர்வு டி இ எல் சி பள்ளியாகவே இருக்கும்.
டிஇஎல்சி என்பது என்ன?
தமிழ் எவாஞ்சலிகல் லுத்தரன் சர்ச் என்பதன் சுருக்கமே டி.இ.எல்.சி. தற்போது இது 'தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை' என்று அழைக்கப்படுகிறது.
லுத்தரன் என்பது என்ன?
கிறிஸ்தவ மதத்தில் மூடநம்பிக்கைகளும் பிற்போக்கான பரப்புரைகளும் அதிகமானதால் பதினாறாம் நூற்றாண்டில் மார்டின் லுதர் கிறித்தவ மதத்திற்குள் சீர்த்திருத்தத்தை புகுத்தினார். அவரது பரப்பரைக்கு ஆதரவு பெருகியது. அதேநேரம் கிறிஸ்தவ பழைமைவாதிகள் மார்டின் லுதரைப் பின்பற்றுபவர்களை லுத்தரன் என்று கேலி பெயரால் அழைத்தார்கள். அச்சொல்லைக்கொண்டு உருவான கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவே எவாஞ்சலிகல் லுத்தரன். எவாஞ்சலிகல் என்கிற சொல் சுவிசேஷ என்றானது. இதன் தமிழ்ப்பதம் நற்செய்தி!
தரங்கம்பாடியில் அச்சு இயந்திரம் தொடங்கிய பார்த்தலோமியஸ் சீகன்பால்கு லுத்தரன் கிறித்தவ பிரிவைச் சார்ந்தவர். இந்தப் பிரிவினர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
புதுக்கோட்டை ஜீவா நகருக்கும் பிருந்தாவனத்திற்கும் இடையில் இருக்கிறது டி.இ.எல்.சி சியோன் ஜூப்ளி சர்ச். ஒற்றை கோபுரத்துடன் அழகும் எளிமையும் கொண்ட திருச்சபை அது.
டி.இ.எல்.சி என்பது தென்னிந்திய கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு. 1919 ஆம் ஆண்டு தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக்கொண்டு ஜெர்மன், டேனிஷ், ஸ்வீடிஷ் மூன்று நாட்டு லுத்தரன் மிஷனர்கள் சேர்ந்து இச்சபையைத் தோற்றுவித்தார்கள்.
இந்தத் திருச்சபையின்கீழ் புதுக்கோட்டை நகரில் ஒரு மேனிலைப் பள்ளியும் ஒரு நடுநிலைப் பள்ளியும் இயங்கி வருகின்றன. நடுநிலைப் பள்ளி இரு கிளைகளாக இயங்குகின்றன. ஒன்று டிஇஎல்சி சர்ச்சையொட்டியும் மற்றொன்று நெய்க்கொட்டான் மரம் நிறுத்தத்திற்கு அருகிலும் இயங்குகின்றன. மேனிலைப் பள்ளி பிருந்தாவனத்திற்கும் அருகில் பழைய அரண்மனைக்கும் நேர் எதிர்புறம் இயங்கி வருகிறது.
டி.இ.எல்.சி சர்ச் புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை சமஸ்தானத்தை கடைசியாக ஆண்ட இராஜகோபாலத் தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் திவானாக இருந்த அலெக்ஸாண்டர் டாட்டன்ஹாமின் கல்லறை டிஇஎல்சி கல்லறைத் தோட்டத்தில் உள்ளது. இந்தக் கல்லறை குறித்து வேறொரு பதிவில் எழுதுகிறேன்.
புதுக்கோட்டை நகரம் தாண்டி சுற்றுவட்டார ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவச கல்வி கொடுத்த பெருமை டிஇஎல்சி பள்ளிக்கு உண்டு. இப்படியாக கல்விக்கு வித்திட்ட டி இ எல் சி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து கல்விப் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அருமை. லூத்தரன் பற்றிய செய்தி புதிது. அதேபோல.. கடலூர் சிதம்பரம் மாவட்டங்களில் ALC என்றழைக்கப்படும் 'ஆற்காடு லூத்தரன் சர்ச்' பிரிவினர் பெருமளவில் இருக்கின்றனர்.
பதிலளிநீக்குஅந்தந்த ஊரின் முக்கியத்துவம். அறிந்து கொள்ளும் வண்ணம், அமைந்திருக்கும் தங்கள் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது.