புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா
புதுக்கோட்டை கீழராஜ வீதியில் புதுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கி எனும் பெயரில் ஒரு வங்கி இயங்குகிறது. இந்த வங்கி நகர வங்கி (TOWN BANK)எனும் பெயரால் தொடங்கப்பட்டது. இந்த வங்கியே புதுக்கோட்டையின் முதல் வங்கியாகும்.
பிரிட்டிஷ் இந்திய சட்டம் -10/1904 இன்படி முக்கிய நகரங்களில் கூட்டுறவு வங்கி தொடங்க அனுமதியளித்தது. இச்சட்டத்தை ஏற்று புதுக்கோட்டை சமஸ்தானம் 1908 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கம் அமைத்தது. இதன்படி முதல் கூட்டுறவு சங்கம் கரம்பக்குடியில் தொடங்கப்பட்டது. அடுத்து 1909 ஆம் ஆண்டு ஆலங்குடியிலும் அதே ஆண்டு புதுக்கோட்டை நகரில் பிரகதம்பாள் பெயரில் ஒரு கூட்டுறவு சங்கமும் தொடங்கப்பட்டன. இந்த சங்கங்களின் வரவு செலவுக்காக தொடங்கப்பட்ட வங்கி இது, நகர வங்கி (TOWN BANK).
மே, 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 1921 ஆம் ஆண்டு வரை வாடகை கட்டடத்தில் இயங்கியது. பிறகு கிழக்கு இரண்டாம் வீதியில் சொந்த கட்டடத்திற்கு மாறியது. 1925 ஆம் ஆண்டு கீழ ராஜ வீதிக்கு அதாவது நேர் முன்புறம் மாற்றப்பட்டது. இந்த வங்கி தற்போது மிக நீளமான கட்டடத்தைக் கொண்டிருக்கிறது. கீழராஜ வீதியிலிருந்து கீழ இரண்டாம் வீதி வரைக்கும் நீண்ட கட்டுமானம் கொண்டிருக்கிறது. பின்புறம் பழைய வங்கி. முன்புறம் புதிய வங்கி.
இந்த வங்கியில் வரவுசெலவு வைத்துக்கொள்ள புதுக்கோட்டை தர்பார் நிதி உதவி செய்தது. அதாவது ரூபாய் இரண்டாயிரம் கடன் கொடுத்து அதை பத்து சம தவணையில் திருப்பி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் நகர வங்கியாக இயங்கிய இந்த வங்கி பிறகு அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கியாக 1920 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. இந்த வங்கியில் புரவலர் திட்டம் தொடங்கப்பட்டு நிரந்தர வைப்பு நிதி வைக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு புதுக்கோட்டையில் பொது நூலகம் தொடங்கியது. இந்த நூலகம் நகர் மன்றத்திற்கும் அருகில் இன்றைய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கியது. முதலில் படிப்பறையாக இருந்த அரங்கு பிறகு நூலகமாக மாற்றப்பட்டது. அந்த இடத்தில்தான் தற்போது உயர்தொடக்கப்பள்ளி இயங்கிக்கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை குடிமக்களுக்கு மிக குறைந்த வட்டியும் மற்ற மக்களுக்கு சற்று கூடுதலான வட்டியிலும் இந்த வங்கி கடன் வழங்கியது. இந்த வங்கி பிறகு 1920 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின்கீழ் இயங்கிய மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டது. புதுக்கோட்டை தர்பார் வரவு செலவு இந்த வங்கிலேயே நடந்தேறியது. இந்த வங்கி குறித்து புதுக்கோட்டை தர்பார்," புதுக்கோட்டை நகர மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வங்கி" என்று புகழாரம் சூட்டியது. தற்போது இந்த வங்கி புதுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கி லிட் எனும் பெயரால் இயங்குகிறது. இந்த வங்கி ஜூலை 1935 இல் வெள்ளி விழா கொண்டாடியது. விழாவின் தலைவர் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியார்.வங்கியின் செயலாளராக இருந்தவர் ஜி. சுந்தரேச ஐயர்.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் இந்த வங்கி தொடர்பான ஒரு விழாவில் கலந்துகொள்ள புதுக்கோட்டை வந்தார். அந்த விழாவில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தேறியது. அந்தச் சம்பவம் குறித்து வேறொரு பதிவில் எழுதுகிறேன்,,,,
குறிப்பு - இந்தப் பதிவு தொடர்பான குறிப்பு , பிழை , மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். இது நமது ஊர் வரலாறு.
கருத்துகள்
கருத்துரையிடுக