சத்தியமூர்த்தி சாலையும் புதிய பேருந்து நிலையமும் @அண்டனூர் சுரா

 


புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் 26.04.1966 அன்று நாட்டப்பட்டது. அன்றைய உணவுத் துறை அமைச்சரும் புதுக்கோட்டைக்கு உட்பட்ட திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. வெ. இராமையா அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்தச் செய்தி அடங்கிய கல்வெட்டு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

பிறகு புதிய பேருந்து நிலையம் 19.04.1981 அன்று கட்டித் திறக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழாவிற்கு அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ப. குழந்தைவேலு அவர்கள் தலைமை வகிக்க, செய்தி, அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம. வீரப்பன் அவர்கள் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு பெருந்தொழிற்துறை அமைச்சர் திரு. எஸ். திருநாவுக்கரசு அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.



அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் திரு.எஸ்.டி காசிராஜன் அவர்கள். நகராட்சி ஆணையர் இரா.வேலு பி.ஏ. இக்கட்டடத்தின் பொறியாளர் திரு. கே. பாலசுப்பிரமணியன். தலைமைக் கொத்தனார் திரு.மு. பழனியப்பன். இந்தக் கல்வெட்டில் தலைமைக் கொத்தனாரின் பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேருந்து நிலையம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட முக்கிய ஆளுமை ஒருவர் இது தொடர்பான செய்தியை இவ்வாறு பகிர்ந்துகொண்டார். “புதுக்கோட்டை பேருந்து நிலையம் திறக்கப்பட்டதன்பிறகு புவனேஸ்வரி கோவில் எதிரே உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் செய்தி, அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம. வீரப்பன் அவர்கள் கலந்துகொண்டார். இவ்விழாவில் வரவேற்புரையாற்றிய புலவர் சந்திரசேகரம் அவர்கள் புதிய பேருந்து நிலையத்திற்கு தீரர் சத்தியமூர்த்தி பேருந்து நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தீரர் சத்தியமூர்த்தி பேருந்து நிலையம் என்கிற பெயரால் இந்தப் பேருந்து நிலையம் பெயர் விளங்கியது. இந்தப் பெயர் தாங்கிய ஒரு வளைவு பேருந்து நிலையத்தின் முகப்பில் இருந்தது. சில காலத்திற்குப் பிறகு இந்த வளைவு எடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்.

மற்றொருவர், புதுக்கோட்டை பேருந்து நிலையம் பேரறிஞர் அண்ணாவின் பெயரால் பெயர் விளங்கியது என்றார். இதைத் தெளிவுப்படுத்த பழைய ஆவணங்களைத் தேடவேண்டியிருந்தது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் சத்தியமூர்த்தி சாலையில் அமைந்துள்ளது. அதாவது பழைய பேருந்து நிலையத்தில் தீரர் சத்தியமூர்த்தி சிலையிருக்கின்ற ரவுண்டானாவிலிருந்து மகளிர் கல்லூரி வரைக்குமான சாலை சத்தியமூர்த்தி சாலை என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சாலையில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் தீரர் சத்தியமூர்த்தியின் பெயரால் பேருந்து நிலையம் பெயர் விளங்கியிருக்கலாம், என்று கருத இடமுண்டு.

அதேநேரம் இந்தப் பேருந்து நிலையத்தைக் கட்டி திறந்த அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சிப் பெயராகக் கொண்ட அதிமுக அமைச்சர்கள். ஆகவே இந்தப் பேருந்து நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரைச் சூட்டியிருக்க வாய்ப்புண்டு என்பதாகவும் கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்த இரண்டு வாய்ப்புகளையும் உள்வாங்கிக்கொண்டு இதுதொடர்பான ஆவணங்களைத் தேடுகையில், கீழ்க்காணும் ஆவணங்கள் கிடைத்தன.




ஒன்று – பேருந்து நிலையம் கல்வெட்டுகள்

பேருந்து பேருந்து நிலையத்தில் மொத்தம் நான்கு கல்வெட்டுகள் உள்ளன.

1. அடிக்கல் நாட்டல் நாள்- 24. 04.1966- புதுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம்

2. பேருந்து நிலையம் திறப்பு – 19.04.1981 – புதுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம்

3. புதுக்கோட்டை நகராட்சி இரண்டாம் கட்ட பேருந்து நிலையம் –புதிய கட்டிடத் திறப்பு – 22.03.1984

4. நகராட்சி பேருந்து நிலையம் – இரண்டாம் கட்டம். புதுக்கோட்டை – இரண்டு அடுக்குகள் – 22.03.1984

இந்தக் கல்வெட்டுகளில் யாருடைய பெயரும் இடம் பெற்றிருக்கவில்லை.





புதுக்கோட்டை பேருந்து நிலையம் கட்டித் திறக்கப்பட்ட காலத்தில் பேருந்து நிலையத்தில் ஒரு தபால் நிலையம் தொடங்கப்பட்டது. அந்த நிலையம்  Pudukottai Bus stand Post Office, Pudukkottai 622001 என்று விளங்கியது. இந்த அஞ்சல் அலுவலகம் ஐந்து ஆண்டுகளுக்கும் முன்பே மூடப்பட்டுவிட்டது.



இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட காலத்தையொட்டிய அச்சு ஆவணங்களைத் தேடுகையில், 16.04.1983 நாளிட்ட தமிழரசு இதழ் புதுக்கோட்டை சிறப்பு இதழாக வெளிவந்தது. இந்த இதழில் அன்றைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எம்.ஏ. கௌரிசங்கர் இ.ஆ.ப அவர்கள் ‘வளரும் புதுக்கோட்டை மாவட்டம்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் தீரர் சத்தியமூர்த்தி எனும் தலைப்பில் ஒரு பத்தி எழுதியுள்ளார். அந்தக் குறிப்பை அப்படியே தருகிறேன்.

தீரர் சத்தியமூர்த்தி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத் தக்கவரும் அந்நாளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் துடிப்புமிக்க பேச்சாளராகத் திகழந்தவருமான தீரர் சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமயத்தில் பிறந்தவரே. புதுக்கோட்டையில் இவரை நினைவுபடுத்தும் வகையில் ‘நகர்மன்ற சத்தியமூர்த்தி தங்கும்விடுதி’, ‘சத்தியமூர்த்தி நகர், ‘சத்தியமூர்த்தி சாலை’ ஆகியவை உள்ளன.


திருமயத்தில் சத்தியமூர்த்தி நினைவகம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான நிலத்தை வாங்கியுள்ளது. நினைவகம் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

இவ்வாறு அந்த இதழில் பதிவு இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து பேருந்து நிலையம் தீரர் சத்தியமூர்த்தியின் பெயரால் அதிகாரப்பூர்வமாக இயங்கியிருக்கவில்லை என்கிற புரிதலுக்கு வரமுடிகிறது.

சத்தியமூர்த்தி சிலை










புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் வடபுறம் சாலையையொட்டி தீரர் சத்தியமூர்த்தியின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இநதச் சிலையையொட்டி செல்லும் சாலைக்கு சத்தியமூர்த்தி சாலை என்று பெயர். சிலை நிறுவியதால் இச்சாலைக்குச் சத்தியமூர்த்தி சாலை என்று பெயரோ, என்று நினைக்கத் தோன்றும். இல்லை, இச்சாலைக்கு சத்தியமூர்த்தி சாலை என்று பெயரிட்டது 1983 ஆம் ஆண்டிற்கு முன்பு. 1983 ஆம் ஆண்டு புதுக்கோட்டை குறித்து கட்டுரை எழுதிய மாவட்ட ஆட்சியர் கௌரிசங்கர் அவர்கள் புதுக்கோட்டை நகர ஒரு சாலைக்கு சத்தியமூர்த்தி சாலை என்று பெயரிட்டதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். 


சிலை திறப்பு

தீரர் சத்தியமூர்த்தி சிலை 21.12.1987 அன்று திறக்கப்பட்டது. திறப்பு  விழா, புதுக்கோட்டை 21.12.1987, திறப்பாளர் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்கள். தலைமை மாண்புமிகு தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. இராம. வீரப்பன் அவர்கள், பங்கேற்றோர் மாண்புமிகு மத்திய உள்துறை  இணை அமைச்சர் திரு.ப.சிதம்பரம், மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி, கைத்தறித் துறை அமைச்சர் திரு. எஸ். திருநாவுக்கரசு, புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. என். சுந்தர்ராஜ் அவர்கள், மின்துறை அமைச்சர் திரு. வி.வி.சுவாமிநாதன் அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க. இளங்கோவன் இ.ஆ.ப ஆகிய பெயர்கள் இக்கல்வெட்டில் இடம்பெற்றள்ளன. இந்தக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள வி.வி.சுவாமிநாதன் அவர்கள் புவனகிரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்..  

இந்த சாலைக்கு ஏன் சத்தியமூர்த்தி பெயர்?

சத்தியமூர்த்தி அவர்கள் திருமயம் கிராமத்தில் பிறந்தவர். திருமயம் சாலையும் புதுக்கோட்டை நகரச் சாலையும் சந்திக்கும் இடம் இது. ஆகவே இச்சாலைக்கு சத்தியமூர்த்தி சாலை என்று பெயர்ச்சூட்டப்பட்டது. பிறகு இச்சாலையில் அவருக்கொரு சிலை நிறுவப்பட்டது.




இதுதவிர புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் ‘சத்தியமூர்த்தி பவன்’ பெயரால் பெயர் விளங்குகிறது. இந்த அலுவலகம் காட்டுப்புதுக்குளத்தின் தென்புறம் பெரியார் நகரில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 17.04.2016 அன்று திறக்கப்பட்டது.



புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் சத்தியமூர்த்தியின் பெயரால் விளங்கியதா?

திராவிட கட்சிகள் தன் ஆட்சிக் காலத்தில் கட்டித் திறக்கும் நிலையம்,கட்டடங்களுக்கு அண்ணாவின் பெயரைச் சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. இந்தக் காலத்தையொட்டி அடிக்கல் நாட்டப்பட்ட கரம்பக்குடி பேருந்து நிலையம் பேரறிஞர் அண்ணாவின் பெயரால் விளங்குகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் யார்ப் பெயரும் சூட்டப்படாமல் நகராட்சி பேருந்து நிலையம் என்று பெயர் விளங்குவதன்பின்னே இப்படியான ஒரு காரணம் இருக்க வாய்ப்புண்டு என்பதாக அறுதியிட முடிகிறது. பேருந்து நிலையம் கட்டித் திறக்கப்பட்ட காலத்தில் புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தது. அதேநேரம் அதிமுக பெரியளவு வளர்ந்து வந்திருந்தது. இப்பேருந்து நிலையத்திற்கு தீரர் சத்தியமூர்த்தி பெயரைச் சூட்டவேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினரும் அதை மறுத்து பேரறிஞர் அண்ணாவின் பெயரைச் சூட்டவேண்டுமென்று ஆளும் கட்சியினரும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். இந்நிலையில் யார்ப் பெயரும் இப்பேருந்து நிலையத்திற்குப் பெயர்ச்சூட்டவேண்டாமென்று புதுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் என்று பொதுப்பெயர்ச் சூட்டியிருக்கலாம்.

இன்று பேருந்து நிலையத்திற்குள் நுழைகையில் அதன் வாயில் “நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி ( 1912 – 2012 ) புதிய பேருந்து நிலையம் தங்கள் வருகைக்கு நன்றி” என்கிற வாயில் இடம் பெற்றுள்ளது.



புதுக்கோட்டை ஊராட்சி நகராட்சியாக 1912 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இதன் நூற்றாண்டு 2012 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை பறைசாற்றும் வகையில் இந்த வாயில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையம் விரைவில் இடித்து புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. அந்தப் பேருந்து நிலையம் புதுக்கோட்டை மாநகராட்சி பேருந்து நிலையம் என்கிற பெயரில் விளங்குகிறதா, அல்லது இதற்கு யாரேனும் ஒரு தலைவரின் பெயர்ச் சூட்டப்படவிருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

டி.இ.எல்.சி (TELC)