சந்தைக்கு வரும் மாடுகளை வரவேற்க ஒரு வாயில் @அண்டனூர் சுரா

 புதுக்கோட்டை நகரம் நேரான வீதிகளை மட்டும் கொண்டதல்ல, சந்தைக்கும் பெயர்போன ஊர்.  சந்தையோடு தொடர்புடைய இரண்டு பேட்டைகள் புதுக்கோட்டையில் உண்டு. ஒன்று வண்டிப்பேட்டை, மற்றொன்று சந்தைப்பேட்டை. வண்டிப்பேட்டை மச்சுவாடியிலும் சந்தைப்பேட்டை நகரத்திற்கு மேற்கிலும் உள்ளன.


சந்தைபேட்டையில்தான் மன்னராட்சி காலம் முதல் இன்று வரை  மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.  புதுக்கோட்டைக்கும் அருகிலுள்ள திருச்சிராப்பள்ளியில் இரண்டு மாட்டுச் சந்தைகள் நடந்திருக்கின்றன. ஒன்று கிழட்டு மாட்டுச் சந்தை, மற்றொன்று உழவு மாட்டுச் சந்தை. இவ்விரு சந்தைகளும் தீண்டாமையின் வடிவங்கள். சாதியின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தான் வளர்க்கும் மாடுகளை கிழட்டு மாட்டுச் சந்தையில்தான் விற்கவும் வாங்கவும் முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த இரண்டு மாட்டுச் சந்தைகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதப் பொருளாகி கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்  இரண்டு பாகுபாட்டுச் சந்தைகள் ஒழிக்கப்பட்டு ஒரே சந்தையானது. இந்த விவாதம் கலைஞர் சட்டப் பேரவை உரையில் இடம்பெற்றுள்ளது. இப்படி திருச்சியில் இருவேறு மாட்டுச் சந்தைகள் நடைபெற்று வந்த காலத்தில் மாட்டின் பெயரால்  பாகுபாடு காட்டாமல் ஒரே மாட்டுச் சந்தையாக இயங்கிய பெருமை புதுக்கோட்டை மாட்டுச் சந்தைக்கு உண்டு. மாட்டுச் சந்தை நடைபெறும் இடம் அன்றும் இன்றும் சந்தைப்பேட்டை என்கிற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை சமஸ்தான கால சந்தையின்போது சந்தைக்கு வரும் மாடுகள் தண்ணீரில்லாமல் தவித்து மயக்கமுற்று விழுந்து இறந்திருக்கின்றன.  இந்த உயிரிழப்பைத் தவிர்க்க முடியாமல் அன்றைய மக்கள் கையறு நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் திருமயம் ராமச்சந்திரபுரம் தி.நா.நாச்சியப்ப செட்டியார் அவர்கள்  மாடுகளின் தாகத்தைத் தணிக்க முன்வந்தார்.  சந்தைக்கும் வெளியே பெரிய ஒரு  மாட்டுத் தொட்டிக் கட்டி, அதில் தண்ணீர் நிரப்பி தர்மம் என்கிற பெயரால்  மாடுகளின் தாகத்தைப் போக்கினார். இத்தொட்டியை 1912 ஆம் ஆண்டு கட்டியவர் அத்தொட்டிக்கும் அருகில் அழகான வேலைபாடுகள் கொண்ட ஒரு நுழைவு வாயிலை எழுப்பினார்.  இந்த வாயில் இன்றும் கம்பீரம் குறையாமல் நல்ல வேலைபாடுகள் கொண்ட கட்டடக் கலை அம்சத்துடன் நின்றுகொண்டிருக்கிறது.

இத்தொட்டிக்கான தண்ணீர் அருகிலுள்ள அக்சா குளத்திலிருந்து கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கிறது. மாடுகளுக்காக கட்டியத் தொட்டி இன்று இல்லை. அந்தத் தொட்டிக்கும் அருகில் எழுப்பப்பட்ட வாயில்  பழைய கம்பீரத்துடன்  நின்றுகொண்டிருக்கிறது. அதேநேரம் வாயில் பராமரிப்பின்றி  சுற்றிலும் புதர்கள் மண்டிபோய்  காட்சியளிக்கிறது.

புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் சந்தைக்கு வரும் மாடுகளுக்குத் தண்ணீர்த்தொட்டி அமைத்து அதன் தாகத்தைத் தணிக்க முன்வரலாம். மேலும்  வாயிலைச் சுற்றிலுமிருக்கும் புதர்களை அப்புறப்படுத்தி புதுக்கோட்டையின் அடையாளமாக இருக்கும் இந்த வாயிலைப் பாதுகாக்கலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்க எத்தனையோ நுழைவு வாயில்கள் உள்ளன. மன்னர்களை வரவேற்றும், ஆட்சியாளர்களின் நூற்றாண்டுகளை கொண்டாடும் பொருட்டும் வாயில்கள் உள்ளன. மாடுகளை வரவேற்க ஒரு வாயில் புதுக்கோட்டையில்தான்!

இப்பதிவின் சுருக்கமான பிரசுரம் தி இந்து தமிழ் திசை (09.11.2024)





















புதுக்கோட்டை: பன்றி நாடு முதல் புதுகை வரை 
வேண்டுவோர் தொடர்பு கொள்க 9585657108


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

டி.இ.எல்.சி (TELC)