வண்டிப்பேட்டை @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டையில் இரண்டு பேட்டைகள் உள்ளன. ஒன்று சந்தைப்பேட்டை.  மற்றொன்று வண்டிப்பேட்டை. சந்தைப்பேட்டை குறித்து இன்னொரு பதிவில் பார்ப்போம்.  புதுக்கோட்டையில் வண்டிப்பேட்டை எங்கே இருக்கிறது?


ஒரு வீட்டின் அடுப்பை வைத்து கிழக்கு மேற்கு திசைகளைக் கண்டு சொல்லிவிட முடியும். அதேபோன்று நகரத்தில் அமைந்துள்ள வண்டிப்பேட்டையைக் கொண்டு நகரத்தின் தலைவாயிலைச் சொல்லிவிடலாம். புதுக்கோட்டை நகரம் ஐந்து வாயில்களைக் கொண்டது. இவற்றில் முகப்பு வாயில் எது?

ஒரு நகரத்தில் வண்டிப்பேட்டை எந்தத் திசையில் உள்ளதோ அதுவே முன்வாயில்.  தஞ்சாவூரில் வண்டிப்பேட்டை கிழக்கு வாசலில் உள்ளது. ஆகவே தஞ்சாவூர் நகரத்தின் முகப்பு வாசல் கிழக்கு. காவிரி பாயும் திசை அது. புதுக்கோட்டையில்  வண்டிப்பேட்டை நகரத்திற்கும்  வடக்கில் அமையப்பெற்றுள்ளது. அப்படியென்றால் புதுக்கோட்டை நகரம் வடக்குத் திசை கொண்டது.

தஞ்சாவூர் சாலையில் மச்சுவாடி கடந்து ஜீவா நகர் வந்தடைகையில்  இடது புறம் செல்லும் குறுகலான சாலை காட்டுநாயக்கன் தெரு. அந்தத் திருப்பமே வண்டிப்பேட்டை. இன்று ஜீவா நகர் என்கிற பெயரால் அழைக்கப்படும் பேருந்து நிறுத்தம்  இதற்கும் முன்பு வண்டிப் பேட்டையின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது.

பேட்டை

பேட்டை என்பது விஜய நகர அரசுடன் தொடர்பு கொண்டது. 16 ஆம் நூற்றாண்டில் இச்சொல் உருவானது.  பேட்டை என்பதற்குச் சந்தைப் பகுதி என்று பொருள். பல நகரத்து  சிறு வணிகர்கள்  ஓரிடத்தில் கூடி தொழில் செய்யும் இடமே பேட்டை.

சென்னையில் பல பேட்டைகள் உள்ளன. ஆங்கிலத்தில் பேட் என்கிற பெயரால்  அழைக்கப்படும் இவ்வூர்களைப் பேட்டை என்று பெயர் மாற்ற தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. ஆயினும் பேட்டை என்பது தெலுங்குச் சொல். வண்டிப்பேட்டையின் பண்டைய பயன்பாட்டுச் சொல் வண்டிமேடு. 

வண்டிப்பேட்டை

புதுக்கோட்டையில் வண்டிப்பேட்டை ஏன் நகரத்திற்கும் வடக்கில் அமைக்கப்பட்டுள்ளது? காரணம், புதுக்கோட்டை நகரத்தின் முகப்பு வாயில் வடக்கு.

புதுக்கோட்டை நகர நிலப்பகுதி வடக்கு மேடாகவும் தெற்கு தாழ்ந்தும் அமையப்பெற்றது.  புதுக்கோட்டை நகரம் கொண்டுள்ள ஐந்து வாயில்களில் பழைய வாயில் என்பது வடக்கு. தொண்டைமான்களின் பூர்வீக வழி இது.  அதாவது கரம்பக்குடி - மழையூர்- வடவாளம்- புதுக்கோட்டை. மேலும் நாகூர், நாகை, தஞ்சாவூர் வணிகர்கள் மதுரைக்குச் செல்லும் வழியாக வடக்குத் திசையே இருந்தது.

ஒரு சிற்றரசு ஒரு புதிய நகரத்தை கட்டமைக்கையில் அந்த அரசை ஆதிக்கம் செய்யும்  பேரரசு அமையப்பெற்றுள்ள திசையை நோக்கியே  அந்நகரத்தை அமைக்க வேண்டும். இந்த வழக்கம் ரோம் பேரரசு தொடங்கி வைத்தது. இதிலிருந்து பிறந்ததுதான் ALL ROADS LEAD TO ROME. புதுக்கோட்டைக்கும் வடக்கில் மதராஸ் இருந்ததால் புதுக்கோட்டை நகரம் வடக்குத் திசையைக் கொண்டது.

புதுக்கோட்டை சந்தைக்கு வரும் வணிகர்கள், நுகர்வோர்கள் நகர முகப்பிலேயே வண்டிகளை நிறுத்திவிட வேண்டும். வண்டிகள் கூடும் இடமாகவும்  சந்தை தொடங்கும் இடமாகவும் கொண்ட பகுதியே  வண்டிப்பேட்டை.

புதுக்கோட்டை வண்டிப்பேட்டை அவ்வளவாக இப்பெயரால் அழைக்கப்படுவதில்லை. ஆயினும்  பண்டைய நகரக் கட்டமைப்பில் வண்டிப்பேட்டை முக்கிய அங்கம் வகிக்கிறது.


                                                 - தொடரும்,,,

எமது சமீப வெளியீடு

புதுக்கோட்டை : பன்றி நாடு முதல் புதுகை வரை -சந்தியா பதிப்பகம்




கருத்துகள்

  1. காட்டு நாயக்கன் தெரு என்பது தற்போதுதான் அழைக்கப்படுகிறது என நினைக்கிறேன். இதற்கு முன்பு இப்படி ஒரு பெயர் இருக்கவில்லை. வண்டிப் பேட்டை அல்லது ஜீவா நகர் நிறுத்தம் என்றே அழைக்கப் பெற்றது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

டி.இ.எல்.சி (TELC)