இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்

புதுக்கோட்டை பிருந்தாவனம் வடக்கு ராஜ வீதியில் ஒரு நூல் கண்டை உருட்டிவிட்டால் நகர் மன்றம், பழனியப்பா தியேட்டன் முக்கம், திமுக மாவட்ட அலுவலகம் தாண்டி திலகர் திடலில் வந்து நிற்கும். இந்தத் திடலுக்கு முன்னதாக சிவப்புக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டு கம்பீரமாக நிற்கும் அலுவலகம் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு அலுவலகம். ஒரு பக்கம் கட்சியின் சின்னம் கருக்கருவாள் சுத்தியல், இன்னொரு புறம் தேர்தல் சின்னம் கருக்கருவாள் நெற்கதிர்.  வெளியில் ஒரு கொடிக்கம்பம்.  அதில் பறக்கும் கட்சியின்கொடி.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 டிசம்பர் 26 இல் தொடங்கப்பட்ட போதும் புதுக்கோட்டையில் இக்கட்சி தொடங்கப்பட்டது 1946 ஆம் ஆண்டில்தான். புதுக்கோட்டையில் இக்கட்சியைத் தொடங்கியவர்களில் பி. கந்தசாமி,  வி.நாகு, வி.வி.எஸ்.வீராச்சாமி போன்றோர் முக்கியமானவர்கள்.

இக்கட்சி தொடங்கிய காலத்தில் புதுக்கோட்டை மன்னர் நிர்வாகத்தை எதிர்த்து ஒரு போராட்டத்தை கையிலெடுத்தது. அப்பொழுது மீ.சேதுராமன், எ.எம்.கோபு, சி.கே. வடிவேலு ஆகிய தோழர்கள் இணைந்து மாணவர் மன்றம் என்கிற அமைப்பைத் தொடங்கினார்கள். இந்நேரத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயர் புதுக்கோட்டை வருகை தந்தார். இவரை எதிர்த்து, ' சர் சி.பி யே திரும்பிப் போ ' என்று போராடியது.

இந்தப் போராட்டத்தின் பின்னே ஒரு வரலாறு உண்டு. திருவிதாங்கூர் திவான் ராமசாமி ஐயர் திருவிதாங்கூர் தனி நாடாகிவிட்டது என்று தன்னிச்சையாக அறிவித்தார். அதனால் புன்னபுரா - வயலார் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பல மக்கள் இறந்தார்கள்.

திருவிதாங்கூரின் இந்ந தன்னிச்சையான முடிவுக்கு ஆதரவு திரட்ட புதுக்கோட்டை வருகைதந்தார்.  அவரது வருகைக்கு எதிராக போராட்டம் வெடித்து.

1948 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி தடை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1949 ஆம் ஆண்டு இந்திய முழுமையும் தடை விதிக்கப்பட்டது.
இக்காலக்கட்டத்தில் கே.ஆர்.சுப்பையா ஜனசக்தி இதழின் முகவராக இருந்து மறைமுகமாக இதழை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.

1964 ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் கம்பீரத்துடன் செயலாற்றியது. இவ்வாண்டில் கட்சியில் தத்துவார்த்த பிளவு ஏற்பட இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) என்று இரண்டாக உடைந்தது. இவ்வலுவலகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமானது.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

டி.இ.எல்.சி (TELC)