அக்காச்சியா குளமும் அக்காச்சிப்பட்டியும்

@ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை மாட்டுச் சந்தைக்கும் வடக்குப் புறமாக உள்ள குளம் அக்சா குளம் என்கிற பெயரைத் தாங்கி இருக்கிறது. இது குளம் அல்ல, ஓடை. தற்போது குளமாக சுருங்கிப் போயிருக்கிறது. அதாவது அடப்பன் குளத்திற்கும் நேர் தெற்கில் இக்குளம் இருக்கிறது.


ஒரு காலத்தில் இக்குளத்தைச் சுற்றிலும் வயற்காடுகள் இருந்திருக்கின்றன. இந்த வயல்களைத் தூர்த்து தெருக்களும் குடியிருப்புகளும் வந்துவிட்டன. ஆகவே இத்தெரு அக்சா வயல் முதல் தெரு, இரண்டாம் தெரு என்கிற பெயரால் அழைக்கப்படுகிறது.

இவ்வயற்காட்டுக்குப் பாசன நீர் தந்த குளம் தற்போது  நீர்த்தாமரை,  அல்லி, நாணல், பாசி, கருவைக்காடுகள் மண்டிப்போய் மக்கள் பயன்பாடற்று காட்சியளிக்கிறது.  இக்குளத்தின் கரையில் சமீபகால பிள்ளையார் இருக்கிறது.

அது என்னதாம் அக்சா குளம் என்று விசாரிக்கையில் அது அக்சா குளம் அல்ல, அக்காச்சியா குளம் என்று தெரியவந்தது.


புதுக்கோட்டை மன்னர்கள் விஜயநகர அரசின் தொடச்சிகள்.  இவர்கள் தெலுங்கு பேசுபவர்கள். இவர்கள் மாமாவை பாவா என்று அழைப்பார்கள்.  அக்காவை அக்காச்சியா என்றும் அக்கம்மா என்றும் அழைத்தவர்கள்.


அக்காச்சியா பெயரில் வேளாண்மைக்குப் பயன்பட்ட ஊருணி சுருங்கி குளமானதைப் போல அக்காச்சியா என்கிற பெயர் சுருங்கி அக்சா என்றாகிவிட்டது. 

அக்கச்சிப்பட்டி எனும் பெயரில் கந்தர்வகோட்டையையொட்டி ஓர் ஊர் உண்டு. இவ்வூர் அக்காச்சியா எனும் பெயரால் அமைக்கப்பட்ட ஊராகும்.

அக்காச்சியா பெயரில் இப்படியான ஒரு வரலாறு எழுதப்பட்டுள்ளது.
அக்காச்சியா என்பவள் பல்லவராய இளவரசி. இவள் நார்த்தாமலை குன்றில் வாழ்ந்து வந்தாள். இவள்மீது அக்கல்ராஜன் எனும் விஜயநகரத்தைச் சேர்ந்த ஒருவன் காதல் கொண்டான். அவனிடமிருந்து தப்பித்து கச்சிரன் எனும் வீரனுடன் தலைமறைவான இடம்தான் இன்று அக்காச்சியாபட்டி என்றாகியிருக்கிறது.

ஊர் பெயர் ஓரளவு அப்படியாகவே உள்ளது. ஆனால் குளத்தின் பெயர் முழுவதுமாக குலைந்து அக்சா என்றாகிவிட்டது.

ஊர்ப் பெயர் அந்த ஊரார்களைத் தாண்டி எல்லாராலும் அழைக்கப்படுகிறது. ஆகவே ஊர்ப்பெயர் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுவதால் அதே பெயரில் இன்றும் பெயர் விளங்கி நிற்கிறது. ஆனால் குளம் அப்படியன்று. குளம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், அப்பகுதி மக்களால் மட்டும் உச்சரிக்கப்படுவதால் காலப்போக்கில் அதன் உண்மையான பெயர் குன்றி மறையத்தொடங்குகிறது.

ஆகவே எந்த ஒரு பெயரும் நிலைத்து நிற்க அப்பெயர் பொதுமக்களின் பயன்பாட்டு பெயராக மாற வேண்டும்.

அக்காச்சியா- அக்கச்சியா- அக்சா. 

நன்றி - இப்பகுதியைச் சுற்றிக்காட்டிய புதுகை பாலச்சந்திரன் மற்றும் மரம் ராஜா.





எனது சமீப நூல்
தொடர்புக்கு - 9585657108


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கோட்டையின் முதல் வங்கி @ அண்டனூர் சுரா

புதுக்கோட்டை பேருந்து நிலையம் @ அண்டனூர் சுரா

டி.இ.எல்.சி (TELC)