ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம் @அண்டனூர் சுரா

புதுக்கோட்டை மச்சுவாடி, ஜீவா நகர் தாண்டி நகரத்திற்குள் நுழைந்தால் இடது புறம் திரும்பும் குறுகலான வீதி ஒத்தத்தெரு.  இதற்கும் அடுத்த தெரு ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம்.


புதுக்கோட்டையில் அக்ரஹாரக் குடியிருப்புகள் நிறைய உள்ளன. இவற்றில் விஜயரகுநாதபுரம் அக்ரஹாரம்,  பிரசன்னா ரகுநாதபுரம் அக்ரஹாரம்,  ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம் ஆகியவை வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன.

புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் அவர்கள் 1825 - 1839 இடைப்பட்ட காலத்தில் இருந்தார். இவருக்கும் முன்பு ஆட்சியிலிருந்தவர் ராஜா விஜயரகுநாத தொண்டைமான். இவர் வயோதிக்கத்தால் இறந்துவிட இவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இவரது தம்பி ராஜா ரகுநாத தொண்டைமான் மன்னரானார். இவர் இறந்த அண்ணனின் பெயரை நிலைநிறுத்தும் பொருட்டு இறந்த மன்னரின் நினைவாக இரண்டு அக்ரஹாரங்கள் உருவாக்கினார். புதுக்கோட்டை நகருக்கும் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் ஒரே அளவுகள் கொண்ட இருபது வீடுகள் கட்டி அதற்கு விஜயரகுநாதபுரம் அக்ரஹாரம் என்று பெயர் சூட்டினார். பிறகு தனது பெயரும் காலத்தில் நிலைத்து நிற்கும்படியாக கடையக்குடி அக்ரஹாரத்திற்கும் எதிரே வெள்ளாற்றின் வடக்குக்கரையில் மற்றொரு அக்ரஹாரம் உருவாக்கி அதற்கு "பிரசன்னா ரகுநாதபுரம்' என்று பெயர்ச் சூட்டினார். இவர் 1839 ஆம் ஆண்டு இறந்துவிட, இவருக்குப் பிறகு ராமச்சந்திர தொண்டைமான் ஆட்சிக்கு வருகிறார். இவரது ஆட்சிக் காலம் 1839- 1886.

இவரது ஆட்சிக்காலத்தில்தான் திவானாக சேஷையா சாஸ்திரி நியமிக்கப்படுகிறார். இவர் புதுக்கோட்டையை திட்டமிட்ட நகராக மாற்றியமைக்கிறார்.  அவ்வாறு அமைக்கையில் பிருந்தாவனத்தையொட்டி திருமயம் கடியாப்பட்டி ராமச்சந்திரபுரத்தை முன் மாதிரியாகக் கொண்டு ஒரு தெருவை உருவாக்குகிறார்.

ராமச்சந்திரபுரம் குடியிருப்பு என்பது ஒரு வீதி ஒரு வீடாகக் கொண்டது. அதாவது இரண்டு வீதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் முழுமையும் வீடுகள் அமைப்பது. அப்படியாக ஒரு தெரு அமைக்கப்பட்டு  அதற்கு  ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம் என்று  பெயர்ச்சூட்டப்பட்டது.

இந்த தெருவிற்குள் செல்வதற்கும் முன்பாக இத்தெருவிற்கும் பின்னாலிருக்கும் ஒத்தத்தெரு சென்றேன். ஒரு பக்கம் மட்டுமே வீடுகள் இருந்தன. இன்னொரு புறம் ஏன் வீடுகள் இல்லையென விசாரித்தேன்.  அடுத்தத்தெரு அக்ரஹாரம் என்று சொன்னார்கள். அக்ரஹாரம் தெருவில் சென்று பார்க்கையில் வீடுகள்  நீளமாக இருந்தன. பின்வாசலில் தோட்டம். தெருவின் உள்ளே சென்று வலது புறம் திரும்புகையில் பெருமாள் கோவில். எதிரே அழகான குளம். புதுக்கோட்டை குளங்களில் இந்த குளம் மட்டுமே சுத்தமாக இருக்கும் போலும். அழகாகவும் இருந்தது.  குளத்திற்கு அய்யர் குளம் என்று பெயர்ச்சூட்டியிருந்தார்கள்.  குளத்தில் வாத்துகள் நீந்திக்கொண்டிருந்தன. 

தெரு அழகாக , சுத்தமாக இருந்தது என்று சொல்வதைக் காட்டிலும் சுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

இந்த ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம் தெருவைப் பார்ப்பவர்கள் ஒரு முறை கடியாப்பட்டி ராமச்சந்திரபுரம் சென்று அந்தக் குடியிருப்புகளை பார்த்து வருவது நல்லது. ராமச்சந்திரபுரம் என்பது குளமும் குடியிருப்புகளும் கொண்டது. அப்படியாகத்தான் புதுக்கோட்டை ராமச்சந்திரபுரம் அக்ரஹாரமும் இருக்கிறது. 







இந்தத் தெரு, குளத்தைச் சுற்றிக் காட்டிய எனது நண்பர்கள் புதுகை பாலச்சந்திரன் மற்றும் பாண்டியன் இருவருக்கும் நன்றிகள்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சத்தியமூர்த்தி சாலையும் புதிய பேருந்து நிலையமும் @அண்டனூர் சுரா

பேரறிஞர் அண்ணா சிலை புதுக்கோட்டை கீழராஜ வீதியில் நிறுவப்பட காரணம் என்ன?

உலக நவீன நகரங்களில் ஒன்றாக புதுக்கோட்டை