திசை சந்தைக்குப் பெயர் போன புதுக்கோட்டை

@அண்டனூர் சுரா 

பிரிட்டிஷ் இந்தியாவிலும் சென்னை மாகாணத்திலும் கிறிஸ்துவ மத மரபைப் பின்பற்றி ஞாயிறு விடுமுறை நாளாக இருந்தது. ஆனால் புதுக்கோட்டை  சுதந்திர சுதேச அரசாக இருந்ததால் மேலும் மன்னர் இந்து என்பதால் பிரிட்டிஷாரின் ஞாயிறு விடுமுறை விதிக்குக் கட்டுப்படாமல் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகக் கடைபிடித்தது.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான்கள் திருக்கோகர்ணம் பெரியநாயகி (பிரகதம்பாள்) அம்மனைத் தங்கள் குலதெய்வ வழிபாட்டு தெய்வமாக ஏற்று ஆட்சி செய்தனர். இந்து  வழிபாடு மரபில் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். மன்னர் முதல் பொது மக்கள் வரை அம்மன் வழிபாட்டில் தடையின்றிப் பங்கேற்க அந்நாளை விடுமுறை நாளாக அறிவித்தார். 

             

மேலும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் முக்கிய பொருளாதார மையமாக விளங்கியது வாரச்சந்தை. திருச்சிராப்பள்ளி, மதுரை நகருக்கு அடுத்ததாக மிகப்பெரிய சந்தையாக புதுக்கோட்டை வாரச்சந்தை விளங்கியது. புதுக்கோட்டை நகரைச் சுற்றிலுமிருந்த நகர வணிகர்கள், நுகர்வோர்கள் நகருக்குள் நுழையும்படியாக புதுக்கோட்டை நகரம் ஐந்து வாயில்களைக் கொண்டிருந்தது.

புதுக்கோட்டை வாரச் சந்தை அண்டை நகர, கிராம வணிகர்கள் கலந்தும்கொள்ளும்படியாக வெள்ளிக் கிழமை நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக வெள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை புதுக்கோட்டை இந்திய  ஒன்றியத்தின் கீழ் இணையும் வரைக்கும் நடைமுறையில் இருந்தது.

             

மன்னர் ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குட்பட்டு ஆலங்குடி, திருமயம், குளத்தூர் என்று மூன்று தாலுகாக்கள் இருந்தன. இவற்றில் புதுக்கோட்டை நகரம் ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட நகரமாக இருந்தது. இவற்றில் ஒவ்வொரு தாலுகாக்களிலும் ஒவ்வொரு நாளில் சந்தைகள் நடந்தேறின.

ஆலங்குடி தாலுகா

ஞாயிறு              – மருதன்கோன்விடுதி இந்த சந்தை பிறகு திருவோணம் சந்தையாக மாறியது.

             

திங்கள்              -    முள்ளன்குறிச்சி

             

செவ்வாய்             -           வடகாடு

             

புதன்               -            கரம்பக்குடி

             

வியாழன்              -             ஆலங்குடி

             

வெள்ளி              -    புதுக்கோட்டை

             

சனி                  -  வெட்டன்விடுதி


திருமயம் தாலுகா

             

ஞாயிறு             -            வீராச்சிலை, ஏம்பல், வாளரமாணிக்கம்

             

திங்கள்             -           கொன்னையூர், அரிமளம்,

             

செவ்வாய்             -             பனன்குடி, கோனாபட்டு,

             

புதன்              -            புதுப்பட்டி, ராயவரம்,

             

வியாழன்             -             குழிபிறை, கீழாநிலை, இரும்பான்நாடு, நகரப்பட்டி

             

சனி                  -          கும்மன்குடி, ராங்கியம், திருமயம், பொன்னமராவதி


குளத்தூர் தாலுகா

             

ஞாயிறு             -     அண்ணவாசல், கொடும்பாளூர்

             

திங்கள்              -             கீரனூர், விராலிமலை

             

செவ்வாய்             -           குடுமியாமலை, பெரம்பூர்

             

வியாழன்             - கிள்ளுக்கோட்டை

             

சனி                  -             புலியூர்

             

குளத்தூர் தாலுகா திருச்சிராப்பள்ளியையொட்டி இருப்பதால் திருச்சிராப்பள்ளியில் அப்பொழுது புதன் கிழமை பெரிய சந்தை நடந்தேறியதால் அன்றைய நாளில் அந்த தாலுகாவில் சந்தை கூடவில்லை.

    

புதுக்கோட்டை சமஸ்தான ஊர்களில் வெள்ளிக் கிழமையைத் தவிர மற்ற நாட்களில் சந்தைகள் கூடி வெள்ளிக் கிழமை  அனைத்து வணிக மக்களும் கூடும் சந்தையாக புதுக்கோட்டை வாரச் சந்தை திகழந்தது. இச்சந்தை திசைகள் ரீதியாக நடைபெற்றது. வீதிகளுக்கும் திசைகளுக்கும் பெயர்ப்போன புதுக்கோட்டையில் தானிய சந்தை தஞ்சாவூர் வணிகர்கள் கலந்துகொள்ளும்படியாக வடக்கு; மாட்டுச் சந்தை மணப்பாறை, திருச்சிராப்பள்ளி வணிகர்கள் கலந்துகொள்ளும்படியாக மேற்கு ; பண்டம், பாத்திரங்கள், எண்ணைய், காய்கறிகள் கரம்பக்குடி, பட்டுக்கோட்டை, ஆலங்குடி வணிகர்கள் கலந்துகொள்ளும்படியாக கிழக்கு ; ஆடை,  நகைகள்  மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை வணிகர்கள் கலந்துகொள்ளும்படியாக தெற்கு நகர வீதிகளில் நடைபெற்றன. இந்த சந்தை முறையை இன்றைய புதுக்கோட்டையிலும் காணலாம்.

            

வெள்ளிக்குப் பதிலாக ஞாயிறு விடுமுறை

புதுக்கோட்டை இந்திய ஒன்றியத்தின் கீழ் இணைந்த பிறகு மார்ச் 23, 1948 அன்று புதுக்கோட்டையில் மிக முக்கியமான ஓர் அறிவிப்பு அரசாணையாக வெளியானது.

G.O.MS. No. 744, dated 233.48. புதுக்கோட்டையில் இப்பொழுது வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாளாக இருப்பதிலிருந்து இனிமேல் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக மாற்றப்பட்டிருக்கிறது என்றும் இது உடன் காலத்திலேயே அமுலுக்கு வரும் என்றும் மேன்மை தங்கிய சென்னை கவர்னர் அவர்கள் உத்திரவிட்டிருக்கிறார் என்கிற அரசாணை அது.

The Government of Madras have issued the following notification in regard to the change of weekly holidays from Friday to Sunday.

G.O.MS. No. 744, dated 23.1948.

“His Excellency the Governor of Madras herey directs that the weekly pulic holiday now eing granted in Pudukottai e changed from Friday to Sunday with immediate effect.”

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15.08.1947 அன்றைய சமஸ்தான புதுக்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்

பாலன் நகர்

உலக நவீன நகரங்களில் ஒன்றாக புதுக்கோட்டை