ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம் @அண்டனூர் சுரா

புதுக்கோட்டை மச்சுவாடி, ஜீவா நகர் தாண்டி நகரத்திற்குள் நுழைந்தால் இடது புறம் திரும்பும் குறுகலான வீதி ஒத்தத்தெரு. இதற்கும் அடுத்த தெரு ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம். புதுக்கோட்டையில் அக்ரஹாரக் குடியிருப்புகள் நிறைய உள்ளன. இவற்றில் விஜயரகுநாதபுரம் அக்ரஹாரம், பிரசன்னா ரகுநாதபுரம் அக்ரஹாரம், ராமச்சந்திரபுரம் அக்ரஹாரம் ஆகியவை வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன. புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் அவர்கள் 1825 - 1839 இடைப்பட்ட காலத்தில் இருந்தார். இவருக்கும் முன்பு ஆட்சியிலிருந்தவர் ராஜா விஜயரகுநாத தொண்டைமான். இவர் வயோதிக்கத்தால் இறந்துவிட இவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் இவரது தம்பி ராஜா ரகுநாத தொண்டைமான் மன்னரானார். இவர் இறந்த அண்ணனின் பெயரை நிலைநிறுத்தும் பொருட்டு இறந்த மன்னரின் நினைவாக இரண்டு அக்ரஹாரங்கள் உருவாக்கினார். புதுக்கோட்டை நகருக்கும் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் ஒரே அளவுகள் கொண்ட இருபது வீடுகள் கட்டி அதற்கு விஜயரகுநாதபுரம் அக்ரஹாரம் என்று பெயர் சூட்டினார். பிறகு தனது பெயரும் காலத்தில் நிலைத்து நிற்கும்படியாக கடையக்குடி அக்ரஹாரத்திற்கும் எதிரே வெள்ளா...